பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை (பிடிஏ) இறுதி செய்ய இந்தியா மற்றும் ஈக்வடார் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்தியாவுக்கு இரு நாள் சுற்றுப்பயணமாக ஏப்ரல் இறுதுpயில் சென்ற ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் கேப்ரியேலா சோமாபெல்ட் ரோசெரோ இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா – ஈக்வடார் இடையே வர்த்தகம் மற்றும் மூலதனம், சுகாதார நலன், மருந்தியல், கல்வி, வேளாண்மை மற்றும் எண்மத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இருநாட்டு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது இந்திய சூரியசக்தி கூட்டமைப்பு மற்றும் சர்வதேச பெரும் பூனை கூட்டமைப்பில் இணைவதற்கான அதிகாரபூர்வ கடிதத்தை ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் கேப்ரியேலா சோமாபெல்ட் ரோசெரோ வழங்கினார்.
அதன்பிறகு விரைவான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை (கியூஐபி) செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருவரும் கையொப்பமிட்டனர். இத்திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஈக்வடாரில் சமூக – பொருளாதார திட்டங்களை அமுல்படுத்த ரூ.12 கோடி நிதியை இந்தியா வழங்கவுள்ளது.
பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை கேப்ரியேலா சோமர்ஃபெல்ட் ரோசெரோ சந்தித்தார். அப்போது இரு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகுக்கும் முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை கேப்ரியேலா சோமர்ஃபெல்ட் ரோசெரோ சந்தித்தபோது இந்தியா – ஈக்வடார் இடையே சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
