மே 8ஆம் திகதியான இன்று பெய்த மழையால் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிக்கு இடையூறு ஏற்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று காலை 11ஆவது நாளாக அகழ்வு பணிகள் ஆரம்பமாகின. மழையால் பணிக்கு இடையூறு ஏற்பட்டது. புதைகுழியிலும் வெள்ள நீர் தேங்கியது. தேங்கிய வெள்ளநீர் நல்லூர் பிரதேச சபையின் பவுஸர் மூலம் வெளியேற்றப்பட்டது.
இதன்பின்னர் தொடர்ந்த அகழ்வில் ஓர் எலும்புக்கூடு கண்டறியப்பட்டது. அத்துடன், முன்னர் கண்டறியப்பட்ட இரு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தொடங்கியது முதல் இதுவரை 260 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்பட்டவற்றில் 256 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாளை சனிக்கிழமை அகழ்வு பணியை அரைநாளாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மழை குறுக்கிடும்பட்சத்தில் நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணிகளை இடைநிறுத்தி நீதிமன்றம் குறிப்பிடும் நாளில் மீள ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
