ஸ்கொட்லாந்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழரான திருநங்கை பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி புதிய வரலாறு படைத்துள்ளார்.
மருத்துவர் கியூ மணிவண்ணன் என்பவரே இவ்வாறு எம். பியாக தெரிவாகியுள்ளார். 29 வயதான இவர் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஸ்கொட்லாந்துக்கு குடிபெயர்ந்திருந்தார்.
கடந்த 7ஆம் திகதி நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர் ஸ்கொட்டிஷ் பசுமை கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பாலின அடையாளம் அற்றவர் என்று குறிப்பிட்ட கியூ. மணிவண்னன் எடின்பரோ – லோதியன் ஈஸ்ட் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.
மாணவர் வீசாவில் ஸ்கொட்லாந்தில் தங்கியிருந்தபோது அவர் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். புதிய தேர்தல் விதிகளின் அடிப்படையில் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிட முடிந்தது.
வெற்றிக்குப் பிறகு உணர்ச்சிபூர்வமாகப் பேசிய மணிவண்ணன், ‘என் பெயர் டாக்டர் கியூ மணிவண்ணன். நான் ஒரு தமிழ் திருநங்கை புலம் பெயர்ந்தவர். இந்த நாட்டில் வெறுப்புணர்வு கொண்டவர்கள் எதையெல்லாம் இழிவாகக் கருதுகிறார்களோ, அந்த அடையாளங்கள் அனைத்தையும் கொண்ட ஒருவன் இன்று உங்கள் பாராளுமன்ற உறுப்பினராக நிற்கிறேன்’ என்று கூறினார்.
வீசா சிக்கல் காரணமாக மணிவண்ணன் தொடர்ந்தும் ஸ்கொட்லாந்தில் தங்கியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால், பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு சுமார் 80 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் ஊதியமாகக் கிடைக்கும். இதனால், அவர் வீசாவை இலகுவாக புதுப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
