குமுதினி படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் நடைபெறவுள்ளது.
காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப் பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம், தென்னிந்திய திருச்சபை ஆலயம், தேவசபை ஆலயம் என்பவற்றில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்ம சாந்திக்காக வழிபாடுகள் சம நேரத்தில் நடைபெறும்.
தொடர்ந்து, காலை 9.15 மணிக்கு படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக மாவிலித்துறையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும்.
இந்த நினைவேந்தலின்போது முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் முன்னெடுக்கப்படும்.
நெடுந்தீவிலிருந்து கடந்த 1985.05.15 அன்று குறிகாட்டுவான் நோக்கி பயணித்த குமுதினி படகு கடற்படையினரால் நடுக்கடலில் மறிக்கப்பட்டது. படகில் ஏறிய கடற்படையினர் அங்கிருந்தவர்களை வெட்டியும் குத்தியும் கொன்றனர். இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர். 30இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
