‘அமெரிக்க ராணுவம், நைஜீரிய ஆயுதப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு, உலகளாவிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸின் இரண்டாம் நிலைத் தளபதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “இன்று இரவு, எனது நேரடி உத்தரவின் பேரில், துணிச்சலான அமெரிக்கப் படைகளும் நைஜீரிய ஆயுதப் படைகளும் இணைந்து, உலகின் மிகவும் தீவிரமான பயங்கரவாதியை போர்க்களத்திலிருந்து அகற்றுவதற்கான, மிக துல்லியமாக திட்டமிடப்பட்ட மற்றும் மிகவும் சிக்கலான ஒரு பணியை சிறப்பாக நிறைவேற்றின.
உலக அளவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இரண்டாம் நிலைத் தளபதியான அபு-பிலால் அல்-மினுகி, ஆப்பிரிக்காவில் தன்னால் பதுங்கிக்கொள்ள முடியும் என்று நினைத்தார்; ஆனால் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்த தகவல்களை தொடர்ந்து தெரிவிக்கும் உளவாளிகள் எங்களிடம் இருப்பதை அவர் அறியவில்லை.
அவர் இனி ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ அல்லது அமெரிக்கர்களை இலக்காகக் கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளைத் திட்டமிடவோ உதவ மாட்டார். அவர் கொல்லப்பட்டதன் மூலம், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகள் பெருமளவில் முடங்கியுள்ளன. இந்த நடவடிக்கையில் எங்களுடன் இணைந்து செயல்பட்டதற்காக நைஜீரிய அரசாங்கத்திற்கு நன்றி. கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும்,” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 2023-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசு, அபு-பிலால் அல்-மினுகியை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்று அறிவித்தது. அபுபக்கர் மைனோக் மற்றும் அபோர் மைனோக் உள்ளிட்ட பல புனைப்பெயர்களைக் கொண்டு இவர் செயல்பட்டு வந்தார்.
