“அப்படி பேசும் தரம் கெட்ட ஆள் ரஜினிகாந்த் கிடையாது” – ஸ்டாலினை சந்தித்தமை பற்றி ரஜினி

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்தது ஏன்? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமாக விவரித்துள்ளார்.

சென்னை – போயஸ் கார்டனில் செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்திருந்தார். அப்போது அவர், “தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் எழுந்தன. அது தொடர்பாக ஊடகத்தினரை சந்தித்து விளக்கம் தர வேண்டும் என கருதினேன். அதற்காக உங்கள் எல்லோரையும் இப்போது சந்தித்துள்ளேன்.

தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நான் ஸ்டாலின் சாரை சந்தித்தேன். அது கொஞ்சம் விமர்சனத்துக்கு உள்ளானது. ஸ்டாலின் சாருக்கும் எனக்கும் இடையிலான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவர் எனது நீண்ட கால நண்பர். ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி என்பது சகஜம். இருந்தாலும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்தது எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் நண்பர் என்ற முறையில் அவரைச் சென்று பார்த்தேன்.

விஜய் முதல்வர் ஆகக்கூடாது, அதிகாரத்துக்கு வரக்கூடாது, அதை தடுக்கவே நான் அங்கு சென்றுள்ளேன் என்றும், இரண்டு பெரிய கட்சிகள் இணைய வேண்டும் என பேசப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்தச் சூழலில் அதெல்லாம் பேச முடியாது. அப்படி பேசும் தரம் கெட்ட ஆள் ரஜினிகாந்த் கிடையாது.

இரண்டாவதாக நான் அவருக்கு (விஜய்) வாழ்த்து தெரிவிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. அவர் வென்றதும் எக்ஸ் தளத்தில் என்னுடைய வாழ்த்துகளை பதிவு மூலம் தெரிவித்தேன். விமான நிலையத்துக்கு செல்லும் போது ஊடகத்தினரை நான் சந்திப்பது வழக்கம். அண்மையில் விமான நிலையத்தில் ஒரு நபர் கையில் போனுடன் வந்து, ‘விஜய் முதல்வர் ஆகியுள்ளார்’ என சொன்னார். நான் அந்த நபரை பார்த்து சிரித்தபடி சென்று விட்டேன். அதை வைத்து நான் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. மேலும், எனக்கு விஜய் மீது பொறாமை என்று சொல்லப்பட்டது.

நான் அரசியலில் இல்லை. அப்படி இல்லாத சூழலில் அவர் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது. ஒருவேளை கமல்ஹாசன் முதல்வர் ஆகியிருந்தால் எனக்கு அந்த பொறாமை வந்திருக்குமா என்று கூட தெரியாது. அப்போதும் எனக்கு பொறாமை வந்திருக்காது.

எனக்கும் விஜய்க்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. நான் விஜய்க்கும், விஜய் எனக்கும் போட்டியிடுவது அது எங்களுக்கு நல்லது இல்லை என சொல்லி உள்ளேன். சிறு வயதில் இருந்து அவரைப் பார்த்து வருகிறேன். அவர் முதல்வர் ஆவதில் எனக்கு என்ன பொறாமை?

அவர் இளம் வயதில் முதல்வர் ஆகியுள்ளார். எம்ஜிஆர், என்டிஆர் செய்த சாதனைகளை விட அவரது சாதனை பெரியது. அது எனக்கு ஆச்சரியம் தந்தது. தனியொருவராக பெரிய கட்சிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளார். சினிமாத்துறையில் இருந்து அவர் வந்துள்ளார். அது எனக்கு ஆச்சரியம் தான் அளிக்கிறது.

விஜய் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கு எனது வாழ்த்துகள்.

நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று விவரத்தை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளேன். எனது ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளில் இணைந்து பயணிக்கலாம் என நான் ஏற்கெனவே சொல்லி உள்ளேன். திரைத்துறையில் இழப்பு என்பது தயாரிப்பாளரை மட்டுமே பாதிக்கும். ஆனால், அரசியல் அப்படி அல்ல. அதன் பொறுப்பு மிகப்பெரியது.

கமல் உட்பட சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள் அவரை (விஜய்) சந்தித்துள்ளனர். நான் சம்பிரதாயத்துக்காக சென்று சந்திப்பவன் அல்ல. அவர் மீதான எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேற்றுவார் என எனக்கு நம்பிக்கை உண்டு. அவருக்கு இரண்டு ஆண்டுகளாவது அவகாசம் கொடுக்க வேண்டும். அவரது தொண்டர்கள் மிகக் கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில், அவர்கள் செய்யும் தவறு விஜய்யை தான் பாதிக்கும்.

அறுபது ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சினிமா புகழ், இளைஞர்கள், மகளிர் கொண்டு வந்துள்ள மாற்றம் இது” என்று தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles