பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடன் நாட்டின் உயரிய விருதான ‘றோயல் ஓடர் ஒப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி கௌரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா.
பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து சென்றிருந்தார்.
இந்நிலையில், இந்த பயணத்தில் மூன்றாவது நாடாக சுவீடனுக்கு அவர் நேற்று சென்றார். அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் விமான நிலையத்துக்கு நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அரசு தரப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. சுவீடன் வாழ் இந்திய மக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சுவீடன் – இந்திய தரப்புக்கு இடையே சிறப்பான உறவுக்காக பிரதமர் மோடி அளித்த பங்களிப்பு, அவரது தலைமை பண்பினை அங்கீகரிக்கும் வகையில் சுவீடன் நாட்டின் உயரிய விருதான‘றோயல் ஓடர் ஒப் போலார் ஸ்டார், கொமாண்டர் கிராண்ட் கிராஸ்’ விருதை வழங்கி கௌரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா. சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த 31ஆவது கௌரவ விருதாக இதுவாகும்.
“இந்தியா மற்றும் சுவீடன், ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே இருதரப்புக்கும் இடையிலான பொருளாதார கூட்டுறவுக்கு வாய்ப்பளிக்கிறது” என்று சுவீடன் நாட்டு நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் உடனான சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அதோடு அந்நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். அப்போது இந்தியா கண்டு வரும் பொருளாதார வளர்ச்சியை அவர் குறிப்பிட்டிருந்தார். அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் உடன் இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசித்தார்.
