மலேசிய அடையாள அட்டை பெற்றுத் தருவதாகக் கூறி நடத்தப்பட்ட பண மோசடிப் புகாரை அடுத்து, சபாவில் போலி அடையாள அட்டைகளைத் தயாரித்து வந்த ஒரு பெரிய ரகசியக் கும்பலை பொலிஸார் அதிரடியாகக் கண்டுபிடித்தனர்.
கடந்த மார்ச் 13ஆம் தேதி 30 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்தார். தனக்கு மலேசிய அடையாள அட்டை பெற்றுத் தருவதாகக் கூறி சிலர் 20,000 ரிங்கிட்டை ஏமாற்றிவிட்டதாகவும், தேசியப் பதிவுத் துறையின் தரவுத்தளத்தில் தனது விண்ணப்பம் குறித்து எந்தவொரு விவரமும் இல்லை என்றும் அவர் கூறியதாக செய்தியாளர் கூட்டத்தில் சபா மாநில பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
அந்தப்பெண்ணின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, சபா பொலிஸா் உடனடியாக ‘ஓப்ஸ் புகோ’ என்ற சிறப்பு அதிரடி வேட்டையைத் தொடங்கினர். இந்த விசாரணைதான் ஒரு பெரும் போலி அடையாள அட்டை கும்பலை நோக்கி பொலிஸாரை வழிநடத்தியது.
கடந்த மே 7ஆம் திகதி தொடங்கி 6 நாள்களுக்கு நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில், 36 முதல் 61 வயதுக்குட்பட்ட 9 சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்தனர். கைதானவர்களில் ஐந்து பேர் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கும்பலிடமிருந்து போலி அடையாள அட்டை தயாரிப்பதற்கான ஏராளமான ஆவணங்கள் மற்றும் உபகரணங்களைப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றில் மலேசிய அடையாள அட்டை விண்ணப்பப் படிவங்கள், விண்ணப்பதாரர்களின் அடையாள ஆவண நகல்கள் மற்றும் புகைப்படங்கள்,
அசல் மற்றும் போலி பிறப்புச் சான்றிதழ்கள் , கடவுச்சீட்டு நகல்கள் மற்றும் போலி அடையாள அட்டைகள், தேசியப் பதிவுத் துறையின் போலி முத்திரைகள் என்பன அடங்கும்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது தண்டனைச் சட்டம் மற்றும் 1990 தேசியப் பதிவு விதிகளின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்குக் கடுமையான சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
