2026-ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற ‘எடெல்மேன் நம்பிக்கை அளவுகோல்’ குறியீட்டின்படி, உலகளவில் மிகவும் நம்பகமான நாடுகளின் பட்டியலில் மலேசியா 7ஆவது இடத்தைப் பிடித்துப் பெரும் சாதனை படைத்துள்ளது.
நிறுவனங்களின் மீதான நம்பிக்கை, சமூக ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில் மலேசியா சரியான பாதையில் பயணிப்பதையே இத்தரவரிசை காட்டுகிறது என வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
“மலேசியாவின் ஒட்டுமொத்த நம்பிக்கைக் குறியீடு கடந்த 2025-ஆம் ஆண்டில் 66 புள்ளிகளாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 71 புள்ளிகளாக அதிரடி உயர்வு கண்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம், வர்த்தகத் துறை, ஊடகம் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என அனைத்து முக்கியத் துறைகளிலும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற உலகின் மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நாடுகளில் ஒன்றாக மலேசியா உருவெடுத்துள்ளது,” என்று அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை, மலேசியாவின் தற்போதைய சிறந்த ஆளுமை, நிலையான பொருளாதார நோக்கு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது மலேசிய மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
“இந்த அங்கீகாரம் என்பது வெறும் ஒரு எண் மட்டுமல்ல; நாட்டின் நிறுவனங்கள் மற்றும் தற்போதைய தலைமைத்துவத்தின் மீது மக்கள் வைத்துள்ள உண்மையான நம்பிக்கையின் வெளிப்பாடாகும். நல்லாட்சி, பொருளாதார நிலைத்தன்மை, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் மலேசியாவின் முயற்சிகள் நேர்மறையான பலன்களைத் தரத் தொடங்கியுள்ளன என்பதை இது நிரூபிக்கிறது,” என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
