நாடு பயங்கரமான பொருளாதார ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த ஆபத்தை மக்களுக்கு தெரிவிக்காமல் தவறான புள்ளிவிவரங்களால் மக்களை ஏமாற்றி வரும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே நாட்டில் தற்சமயம் அமைந்து காணப்படுகின்றது. எப்போதுமே உண்மையை கூறாமல் பொய்களைப் பரப்பிக் கொண்டு பிரச்னைகள் இல்லை என காட்டியவாறே பால் மா மற்றும் எரிபொருட்களின் விலைகளை இந்த அரசாங்கத்தினர் கூட்டி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
எரிபொருள் மற்றும் பால் மா விலைகளை கூட்டுவதற்கு நாட்டில் காணப்படும் பொருளாதார ஆபத்தே காரணமாகும். ஆனபடியால், இது குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உலக நிலையான பொருளாதார கோட்பாட்டின்படி ஒரு நாட்டினது அந்நியச் செலாவணி கையிருப்பானது குறைந்தது 3 மாத இறக்குமதி மதிப்பிற்கு சமனாக அமைந்து காணப்படவேண்டும்.
ஜனாதிபதி கூறுவதுபோல் நாட்டில் 7 பில்லியன் டொலர் காணப்படுகின்றன. இதில் மாதத்திற்கு 2 பில்லியன் டொலர் செலவாகின்றன. மூன்று மாதங்களுக்கு 6 பில்லியன் அமைந்து காணப்பட வேண்டும். ரூபா மதிப்பிழப்பு மற்றும் எரிபொருள் விலைகள் உயர்வால் இந்த கையிருப்பு குறைந்து வருகின்றன.
இந்த 7 பில்லியனில், 1.2 பில்லியன் சீன யுவான் காணப்படுகின்றன. ஆனால் அதனை பயன்படுத்த முடியாது. 5.8 பில்லியன் டொலர்களே எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். 2022 இல் 95 ரக பெற்றோலின் விலை ரூ. 470 ஆக காணப்பட்டது. இதே ரக பெற்றோல் இன்று ரூ. 410 ஆக காணப்படுகின்றன. இந்த மதிப்பு அதிகரித்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்.
அண்மைய காலத்தில் அந்நியச் செலாவணி பரிமாற்றங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. ஆனால் மத்திய கிழக்கு யுத்தத்தால் அந்த பிராந்தியத்தில் ஏற்படும் பொருளாதார ஸ்திரமற்ற தன்மையால் தொழில் இழப்புகள் ஏற்பட்டு அது குறைவடைவதற்கும் சந்தர்ப்பங்கள் எழுந்து காணப்படுகின்றன. அரசாங்கம் நாட்டு இது தொடர்பில் விளக்கங்களை முன்வைக்காதிருக்கின்றது.
அவ்வாறே, 2027 மார்ச் மாதத்தில் நாணய நிதிய இணக்கப்பாடு முடிவுக்கு வரும் வேளை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நாட்டிற்கு கிடைக்கும் நிலைப்படுத்தும் ஆற்றல் போன்றவை நீங்கிவிடும்.அன்னியச் செலாவணி பரிமாற்றங்கள் குறைந்து, எரிபொருள் விலை உயர்ந்து, ரூபா மதிப்பிழந்தால் கடுமையான ஆபத்து இங்கு உருவாகும்-என்றார்.
