அமெரிக்காவும் ஈரானும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இன்று திங்கட்கிழமை அதிகாலையும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டன. கடந்த வாரத்தில் நடந்த மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
இந்தத் தாக்குதல்களால் ஹோர்முஸ் கடற்பரப்பில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதேநேரத்தில், இந்தச் சண்டையால் சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. குறிப்பாக ஆசிய சந்தைகளில் எரிபொருட்களின் விலைகள் 2 சதவீதம் அதிகரித்துள்ளன.
தமது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமைக்கு பதிலடியாகவே தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானுக்கு சொந்தமான கோருக்கு, கெஷ்ம் தீவுமீதே இந்தத் தாக்குதலகள் நடத்தப்பட்டன என்று அமெரிக்காவின் மத்திய கட்டளைப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக குவைத்திலுள்ள அமெரிக்க படைகளின் விமானத் தளம்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை அறிவித்துள்ளது. அத்துடன், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கான பதில் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது.
இந்தநிலையில், இரு நாடுகளிடையேயான போர் நிறுத்தம் முட்டுக்கட்டையை சந்தித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணை திறப்பு, ஈரானின் செறிவூட்டிய யுரேனியத்தை கைவிடுவது தொடர்பாக அமெரிக்கா ஒப்பந்தத்தில் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஈரானின் உரிமைகள் முழுமையாக உறுதி செய்யப்படாதுவிடின் ஒப்பந்தத்தை ஏற்கப் போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இஸ்ரேல் லெபனானிலும் காஸாவிலும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் லெபனானில் 6 பேரும் காஸாவில் 2 பேரும் கொல்லப்பட்டனர் என்று அந்த நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
