குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று புதன்கிழமை அதிகாலை நடந்த இந்தத் தாக்குதலில் சிலர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளது, குறித்த விமான நிலையத்துக்கு வருகை தரும் விமானங்களும் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக விமான நிலையத்தின் முதலாவது முனையக் கட்டடமத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக, பொது சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையை மேற்கோள் காட்டி அந்த நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
குவைத் நோக்கி ஈரானால் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் இலக்கை அடையத் தவறின அல்லது நடுவழியில் உடைந்தன என்றும், பஹ்ரைனை இலக்கு வைத்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டன என்றும் அமெரிக்க இராணுவம் முன்னதாக தெரிவித்தது.
ஈரான் பிராந்திய அண்டை நாடுகள் மீது பொலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய போதிலும், அவை அனைத்தும் இலக்குகளைத் தாக்கத் தவறிவிட்டன என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்தத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் குஷ்ம் தீவில் தாக்குதல்களை நடத்தியதுடன், ஈரானின் பல பொலிஸ்டிக் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் முறியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
