சூர்யகுமார் யாதவ் இந்திய இருபதுக்கு 20 அணியில் இருந்து நீக்கப்பட்டமைக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முதன்மை தேர்வாளர் அஜித் அகார்கர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
35 வயதான சூர்யகுமார் யாதவ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமன்றி, அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்படவில்லை.
சூர்ய குமார் யாதவ் இந்திய அணிக்கு 3ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்து வரலாற்று சாதனை படைத்த போதிலும், கடந்த இரண்டு வருடங்களாக அவரின் ஆட்டத்திறன் எதிர்பார்த்த அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அஜித் அகார்கர், 2025 ஜனவரி 1 முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் அவர் விளையாடிய 35 போட்டிகளில் வெறும் 702 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார் எனவும் இதனால் அவரின் சராசரி 26ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் இருபதுக்கு 20 போட்டிகளில் 43.60ஆக இருந்த அவரது துடுப்பாட்ட சராசரி, 2024 ஜூலையில் தலைவரான பிறகு 25.88 ஆகக் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பிந்தைய இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை கருத்திற் கொண்டு, அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான சிறந்த வழி இதுவே எனத் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அஜித் அகார்கர்,
உலகக் கிண்ணத்தை வென்று தந்த ஒருவருடன் இத்தகைய விவாதத்தை நடத்துவது எளிதான காரியம் அல்ல என்றும், இது ஒரு கடினமான முடிவு என்றாலும் அணியின் எதிர்கால நலன் கருதியே எடுக்கப்பட்டதுடன் இது குறித்து சூர்யகுமாரிடம் தாம் தனிப்பட்ட முறையில் பேசினார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய இருபதுக்கு 20 தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
