தெரு நாய்களை கொடூரமாக தாக்கிய சந்தேக நபர் கைது

கொழும்பு – மஹரகமவில் வீடொன்றின் முன்பாகவிருந்த தெரு நாய்கள்மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வீட்டின் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்ட விலங்குக்காக நீதி கோரி பொலிஸ் நிலையத்துக்கு ஆரம்பத்தில் சென்றபோது முறைப்பாட்டை பெற பொலிஸார் மறுத்து விட்டனர்.

அப்பகுதியில் நடமாடும் நபர் ஒருவர், வீதியில் நின்ற நாய்கள்மீது முதலில் கல்லெறிந்து துரத்தியுள்ளார். பின்னர், இரவு நேரத்தில் வருகை தந்து உறங்கிக் கொண்டிருந்த நாய்களை தடியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் அங்கிருந்த வெள்ளை நிற நாய் ஒன்று பலத்த காயமடைந்தது.

அதனைத் தொடர்ந்து மறுநாள் காலையிலும் குறித்த நபர் தடியுடன் வந்து விலங்குகளைத் துரத்தித் தாக்கியுள்ளார். இதனை அவதானித்த குறித்த வீட்டின் உரிமையாளர்கள் அவரைத் தடுத்துக் கண்டித்த போதிலும், அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், அன்றைய தினமே மதியம் 12 மணியளவில், வீதியோரம் உறங்கிக் கொண்டிருந்த நாய் ஒன்றின் மீது அவர் திட்டமிட்டு மோட்டார் சைக்கிளால் மோதினார் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க முயன்றபோது நிலையப் பொறுப்பதிகாரி முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளார்.

“இவை தெரு நாய்கள் என்பதால், இவற்றின் பொறுப்பை நீங்களே ஏற்க வேண்டும்” என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

அதற்கு வீட்டின் உரிமையாளர்கள் , “இவை வாயில்லாப் பிராணிகள், இவற்றால் பேச முடியாது என்பதால்தான் நாங்கள் நீதி கேட்டு வந்துள்ளோம்” என வாதிட்டுள்ளனர்.

ஆனால், நடவடிக்கை எடுக்க பொலிஸார் மறுத்து விட்டனர். இதையடுத்து சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அதன் பின்னரே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles