பாடகர் சங்கீத்சனின் விடுதலையை வலியுறுத்தி இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை நடத்தவிடாது ஏற்பாட்டாளர்களை பொலிஸார் மிரட்டி அச்சுறுத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பாடகர் சங்கீத்சன் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரின் விடுதலையை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் – வடமராட்சி – வல்வெட்டித்துறை சந்தியில் போராட்டம் ஆரம்பமானது.
சமூக அரசியல் செயல்பாட்டாளரான விமலதாஸ் கவிச்செல்வன், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளரான இரா. சுரேன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். அவர்கள்> சங்கீத்சனின் விடுதலையை வலியுறுத்தியதுடன், பயங்கரவாதத் தடை சட்டத்தை முற்றாக நீக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், வல்வெட்டித்துறை பொலிஸாரின் அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
முன்னதாக, நேற்றைய தினம் போராட்ட ஏற்பாட்டாளர்களை அழைத்த பொலிஸார், போராட்டத்தை நடத்தினால் பயங்கராவாதத் தடைச் சட்டம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்வோம் என்று மிரட்டினர். ஆனால், பொலிஸாரின் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் போராட்டம் நடைபெற்றது.
இன்றைய போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், வலி. கிழக்கு பிரதேசசபை உபதவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன், வல்வெட்டித்துறை நகர சபை பதில் தவிசாளர் நா. பத்மநாதன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற அரசியல், சிவில் சமூக தரப்பினர் பாடகர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டனங்களையும் பதிவு செய்திருந்தனர்.
