அம்பாறையின் காரைதீவு பொலிஸ் நிலைய தடுப்புக்காவல் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவுஇ 119 அவசர அழைப்புக்கு அமைவாக குடும்பத் தகராறு தொடர்பில் கைது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட 65 வயதான அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட தகவலின்படி, அவர் தனது ஆடையைப் பயன்படுத்தி தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனினும்இ உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் காணப்படுகின்றன என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர் தூக்கில் தொங்கி உயிரிழக்கவில்லை எனவும் இது தொடர்பில் நியாயமான விசாரணை வேண்டும் எனவும் உறவினர்கள் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே நபர் இரண்டு நாட்களுக்கு முன்னரும் இதே குடும்பத் தகராறு காரணமாக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மரண விசாரணை முடிவடைந்த பின்னர் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட உயரதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் உள்நாட்டு விசாரணை மற்றும் மேலதிக நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
