கணேமுல்லை சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தியை மேலும் 30 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்வைத்த காரணிகளை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்திக்கு எதிராக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த தடுப்புக்காவல் காலம் நிறைவடைந்த நிலையில், விசாரணைகளைத் தொடர புதிய தடுப்புக்காவல் உத்தரவு தேவை என்று நீதிமன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதேவேளை, இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சில சந்தேகநபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்றும் அவர்களைக் கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணையின்போது சில சந்தேகநபர்கள் நீதிமன்றில் நேரடியாகவும் ஏனையோர் மெய்நிகர் ஊடாகவும் முற்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை ஜூன் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
