தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சியோல் மத்திய நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை இன்று வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஒக்ரோபரில் வடகொரியாவின் பியோங்க்யாங் நகரின் வான்பரப்பிற்குள் இராணுவ ட்ரோன்களை அனுப்பிய நடவடிக்கையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த ட்ரோன் நடவடிக்கை, பின்னர் அறிவிக்கப்பட்ட இராணுவச் சட்டத்திற்கான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக வழக்குத் தரப்பு வாதிட்டது.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் எதிரி நாட்டுக்கு உதவியமை தொடர்பான குற்றச்சாட்டுகளிலும் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
எனினும், யூன் சுக் இயோல் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். அத்துடன், இந்த நடவடிக்கை வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடி என அவரின் தரப்பு வாதிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
