இறுதி போர் நடவடிக்கையின்போது மீட்கப்பட்ட ரூபா 161 இலட்சம் பெறுமதியான 10 ஆயிரத்துக்கும் அதிகமான தங்க ஆபரணங்களின் அளவீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த தங்க ஆபரணங்கள் தற்போது இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. தெரிவித்தது.
10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆபரணங்களை அளவீடு செய்து முடிப்பதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுத்ததாகவும் சி.ஐ.டி. நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதம நீதிவான் உத்தரவிட்டார்.
முன்னதாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் உள்ளிட்ட கட்டடங்களிலிருந்து மீட்கப்பட்டு, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த ஆபரணங்களை தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபையிடம் ஒப்படைத்து பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
