சிங்கப்பூர் கற்கரையில் கரையொதுங்கிய அரிய வகை கடல் ஆமை

உலக அளவில் அருகிவரும் ‘ஹாக்ஸ்பில்’ வகைக் கடல் ஆமை ஒன்று, திங்கட்கிழமை (ஜூன் 22) மாலை சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காக் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டுக்கான ஆமைகளின் முட்டையிடும் பருவம் தொடங்கியுள்ள நிலையில், தேசிய பூங்கா கழக ஊழியர்கள் திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் அந்த ஆமை கரையொதுங்கியிருந்ததைக் கண்டனர்.

கடற்கரை மணலில் முட்டையிடுவதற்காக அந்தப் பெண் ஆமை குறைந்தது நான்கு முறை முயற்சி செய்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் அது முட்டையிடாமலேயே ஏமாற்றத்துடன் மீண்டும் கடலுக்குள் திரும்பியதாகக் கூறப்பட்டது.

ஆமை கடலுக்குள் திரும்புமுன், கழகத்தின் தேசியப் பல்லுயிர் நிலைய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அதன் துடுப்புகளில் தனித்துவமான அடையாள வில்லைகளைப் பொருத்தினர்.

இதற்கிடையே, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் லிண்ட்சே டனாபே, அந்த ஆமையின் மரபணுக்களை ஆய்வு செய்வதற்காக அதன் திசு மாதிரிகளைச் சேகரித்தார்.

“இந்தத் தரவுகள் கடல் ஆமைகளின் ஆரோக்கியம் குறித்தும், காலநிலை மாற்றத்தால் அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஆராய விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவும்,” என்றார் அவர். மேலும், அந்த ஆமையின் ஓட்டின்மீது ஒட்டியிருந்த கடல் சிப்பிகளையும் அவர் அகற்றினார். ஆமை எளிதாக நீந்துவதற்கு அது உதவும்.

பறவையின் அலகைப் போன்ற மூக்கைக் கொண்ட இந்த ‘ஹாக்ஸ்பில்’ ஆமைகள், பவளப்பாறைகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிங்கப்பூர் கடற்கரைகளில் மக்கள் நடமாட்டமும் வெளிச்சமும் அதிகமாக இருப்பதால், ஆமைகள் முட்டையிட அச்சப்படுவதாகக் கூறப்படுகிறது.

கடற்கரையில் இத்தகைய ஆமைகளைக் காண நேர்ந்தால் பொதுமக்கள் தள்ளி நின்று அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வெளிச்சம் காட்டி அவற்றைப் பயமுறுத்த வேண்டாம் என்று வலியுறுத்திய அதிகாரிகள், உடனடியாக 1800-471-7300 என்ற எண்ணில் தேசியப் பூங்காக் கழகத்துக்குத் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles