தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு! ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து பேச்சு

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதுடன், ஈழத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணமொன்றும் முதல்வரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியப் பேரவை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினராகிய நாம், இன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்துக் கலந்துரையாடினோம்.

இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி (கூட்டாட்சி) அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம் மற்றும் ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இந்திய மற்றும் ஈழத் தமிழ்க் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனநாயகத் தமிழர் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ், அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகிய ஏழு பேர் கொண்ட குழுவினர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.” – என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles