சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிக இளம் வயதில் அறிமுகமான இந்திய வீரர் என்ற மாபெரும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இளம் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்ததன் மூலம் அவர் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
அத்துடன், போட்டி ஆரம்பிப்பதத்திற்கு முன், இந்திய அணியின் துணைத் தலைவர் திலக் வர்மா, வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுகத் தொப்பியை வழங்கி வாழ்த்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் விக்கெட்காப்பாளர் துடுப்பாட்டக்காரர் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.தனது முதல் சர்வதேச போட்டியில் களம் கண்ட சூர்யவன்ஷி 14 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் மிக இளம் வயதில் இந்திய அணிக்காக அறிமுகமாகி நீண்ட காலமாக இச்சாதனையைத் தன் வசம் வைத்திருந்தத்துடன், தற்போது அந்தப் பெருமை வைபவ் சூர்யவன்ஷிக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
