புதிய சாதனை படைத்த சூர்யவன்ஷி! சச்சின் பாராட்டு!!

தனியொரு வீரர் ஐபிஎல் தொடர்களில் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வது ஒன்றும் புதிதல்ல என்றாலும், இந்தப் புதுப்புயல் வைபவ் சூர்யவன்ஷியின் ஹிட்டிங் உண்மையில் பலரையும் விண்ணிலிருந்து வந்த ஒரு புது அவதார கிரிக்கெட் வீரராகவே அவரை நினைக்க வைத்துள்ளது.

நேற்று கம்மின்ஸ் முதலில் அவரை 2 பந்துகள் கட்டுப்படுத்தினாலும் அடுத்ததாக கம்மின்ஸ் தனது துல்லிய யார்க்கரில் துளி அளவு பிசகினாலும் பந்து சிக்ஸருக்கு செல்வதுதான் காட்சியாக இருந்தது. அதே போல் ஸ்லோயர் ஒன்களையும் சூர்யவன்ஷி விரைவில் பார்த்து விடுகிறார். அதை அப்படியே நின்று ஒரே தூக்குத் தூக்குகிறார். கம்மின்ஸை ஒரே ஓவரில் 4, 6, 6, 6 என்று விளாசுவதெல்லாம் சாதாரண விஷயமல்ல, அதுவும் 15 வயது சிறுவன் இதைச் செய்ய முடிகிறது என்றால் ஆச்சரியத்தையும் கடந்த அதிசயமாகவே உள்ளது.

துல்லியம் கொஞ்சம் தவறினாலும் பந்து மைதானத்திற்கு வெளியே என்றால் எப்படிக் கள வியூகம் அமைப்பது, எங்கே வீசுவது என்ற கேள்விகளை எதிரணிக்கு ஏற்படுத்துபவராக உள்ளார் சூர்யவன்ஷி. அதுவும் கால்களை நோக்கி வீசி கட்டுப்படுத்துகின்றனர் என்பதை விரைவில் கணித்து வலது காலை ஒதுக்கிக் கொண்டு விளாசும் திறமையோடு இல்லாமல் இதனை சீராக ஒவ்வொரு முறையும் செய்ய முடிகிறது என்பது இதுகாறும் கிரிக்கெட் உலகில் காணக்கிடைக்காத அரும்பெரும் திறமை என்றே கூற வேண்டும்.

29 பந்துகளில் 12 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் என்றால் 17 பந்துகளில் 92 ரன்களை அவரால் விளாச முடிகிறது என்பதுதான் அவரது உண்மையான ஸ்ட்ரைக் ரேட். சிக்ஸர்களில் கெயில் 2012 சீசனில் 59 சிக்ஸர்களை விளாசி சாதனையை நேற்று வரை வைத்திருந்தார். ஆனால், வைபவ் சூர்யவன்ஷி நேற்று இதை உடைத்தார். அதுவும் 15 வயதில். இந்த ஆட்டத்துக்கு முன்பாக 53 சிச்ஸர்கள் என்று இருந்த சூர்யவன்ஷி, நேற்றைய இன்னிங்ஸிற்குப் பிறகு 65 சிக்ஸர்கள் என்று கெயிலைக் கடந்து உயரம் சென்றுள்ளார். 10 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே கெயில் சாதனையை உடைத்து பல படிகள் கடந்து சென்று விட்டார்.

இத்தனை நாட்களாக இந்திய லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர், வைபவ் சூர்யவன்ஷி பற்றி எதுவும் கூறவில்லையே என்று காத்திருந்த நமக்கு ‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்’ போல் சூர்யவன்ஷியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்:

“வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் தனித்துவமாக உள்ளது. அதைவிடவும் வியக்கத்தக்கது என்னவென்றால், தன் கால்களை நோக்கி வரும் பந்துகளுக்கு இடம் உருவாக்குவதற்காக, அவர் தனது முன் காலை எவ்வளவு அழகாக நகர்த்துகிறார் என்பதுதான். இந்தச் சுதந்திரம்தான் அவர் அவ்வாறு விளையாட அனுமதிக்கிறது.

அந்த ஆட்டம் ஓர் அற்புதமான காட்சி விருந்து என்பதைத் தவிர வேறொன்றுமில்லை!” என்று சச்சின் பாராட்டியுள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் 15 ஆட்டங்களில் இதுவரை சூர்யவன்ஷி 680 ரன்களைக் குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 242.85.

இவரது ஆட்டத்தைப் பற்றி ஏற்கெனவே ஆஸ்திரேலிய கேப்டனும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான கம்மின்ஸ், ‘என்னுடைய புதிய ஃபேவரைட் வீரர் வைபவ்’ என்றார். நேற்றைய இன்னிங்ஸைப் பார்த்து, எதாவது செய்து வீரரை வீழ்த்தும் திறன் கொண்ட அவரைப் போன்ற ஒருவரே இப்படிக் கூறுகிறார்: “அவரை வீழ்த்துவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்றே தோன்ற ஆரம்பித்து விட்டது.” என்று கூறியுள்ளது சூர்யவன்ஷியின் அருமை பெருமைகளை விளக்குவதாக உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles