நாட்டில் இவ்வாண்டு இதுவரை பதிவான டெங்குச் சம்பவங்களின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது. அதோடு அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் உயர்ந்துள்ளன. இருப்பினும், நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டு ஜூன் 27-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 38, 800க்கும் அதிகமான டெங்கு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் அவ்வெண்ணிக்கை 29.1 வீதம் அதிகமாகும். உயிரிழப்புகள் 18 இலிருந்து 30ஆக அதிகரித்துள்ளன.
இது 66.7 விழுக்காடு கூடுதலாகும். நகர்மயமாதல், காலநிலைக் காரணிகள், கொசுக்கள் இனவிருத்தி செய்யும் இடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு ஆகியவற்றுடன், டெங்கு வைரஸ் வகைகளில் மாற்றம் ஏற்பட்டதே இதற்குக் காரணம் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை டெங்கு சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்தாலும், நோய்த் தொற்றுப் பரவல் மீதான மதிப்பீடுகள் எவ்வித அசாதாரண மாற்றத்தைக் காட்டவில்லை என்றும் அமைச்சு விளக்கியது.
இவ்வேளையில் நிலைமைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நிலைகளிலும் கண்காணிப்புகளும் உரிய நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட இடங்களில் புகை மூட்டம் பரப்பும் பணிகள் உட்பட கொசு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மாநில மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக் காட்டியது.
