ஸ்பெய்னில் காட்டுத் தீயில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

ஸ்பெய்னின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவில் உள்ள லாஸ் காஸார்டோஸ் பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 6 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்தலூசியா பிராந்திய அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் சிலர், தீயில் முற்றாகக் கருகிய வாகனங்களுக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மின்சாரக் கம்பி ஒன்று அறுந்து விழுந்ததே இந்தத் தீ விபத்துக்குக் காரணம் என்றும், இதனால் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குத் தீ வேகமாகப் பரவியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தீ விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

தெற்கு ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் சுமார் 40 டிகிரி செல்சியஸ் கடுமையான வெப்ப அலையே இத்தகைய காட்டுத்தீ பரவலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

“லாஸ் காஸார்டோஸ் காட்டுத்தீயில் மேலும் 6 பேரின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது” என்று அந்தலூசியா பிராந்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேடார் என்ற சிறிய கிராமப் பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தீ விபத்து காரணமாகப் பல சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், சுமார் 1,000 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அவசரக்கால சேவைகள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜூன் மாதத்தில், 1950ஆம் ஆண்டிற்குப் பிறகு ஸ்பெயின் தனது மிக உயர்ந்த தினசரி சராசரி வெப்பநிலையைப் பதிவு செய்திருந்தது. நாட்டின் சில பகுதிகளில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles