ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகமான காத்தம் அல்-அன்பியா தெரிவித்துள்ளது.
ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த நீரிணையில் அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் “அபாயகரமான நடவடிக்கைகள்”, பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குப் பெருமளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதை நாங்கள் அனுமதிக்கவில்லை, இனிமேலும் அனுமதிக்க மாட்டோம் என்றும், அமெரிக்காவின் “கொள்ளைக்கார ராணுவத்தால்” (Bandit army) ஏற்படும் எந்தவொரு இடையூறுகளையும் ஈரானிய ஆயுதப் படைகள் தகுந்த முறையில் கையாண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்காவுடன் வைக்கப்படும் எந்தவொரு ஒத்துழைப்பும் ஈரானின் இறையாண்மைக்கு எதிரான போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும், இந்த மோதல் தீவிரமடைந்தால் போர் நெருப்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் சுட்டெரிக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா, ஹோர்முஸ் நீரிணையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது என்று டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்திருந்த பின்னணியில் ஈரானின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
