கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை, பொலிஸ் அதிகாரிகள் இருவர் பின்தொடர்ந்து சென்று, தேவமொட்டாவ பகுதியில் வைத்து வழிமறித்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அவரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது, சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் சற்றுத் தூரம் சென்றார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சந்தேகநபர், மற்றொரு அதிகாரியிடம் இருந்த கடமைநேரத் துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது சரமாரியாகச் சூடு நடத்தினார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய கையோடு, அங்கிருந்த வேறொரு மோட்டார் சைக்கிளில் ஏறிய சந்தேகநபர் மின்னல் வேகத்தில் தப்பியோடினார். சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தலைமறைவாகிய சந்தேகநபரைப் பிடிக்க விசேட தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்.
இதன் பலனாக, மினுவாங்கொடை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
