உலகக் கிண்ணத் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் அசாத்தியமான ஆட்டத்தைக் கண்ட பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நட்சத்திர வீரரின் ஓய்வு குறித்து அர்ஜென்ரீனா கால்பந்து சம்மேளனம் (AFA) எந்த அவசரமும் காட்டவில்லை.
மெஸ்ஸி எப்போது தனது கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்பதை அவரேதான் தீர்மானிக்க வேண்டும் என்று அர்ஜென்ரீனா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சம்மேளனத் தலைவர் கிளாடியோ “சிகி” தபியா தெரிவித்துள்ளார்.
“ஓய்வுபெறுதல் என்பது முற்றிலுமாக அவரது தனிப்பட்ட முடிவு. அவரை நாம் நிம்மதியாக விளையாட விட வேண்டும். 2022இல் அவர் 2026 உலகக் கிண்ண போட்டியிலா் விளையாடுவாரா என்றே நமக்குத் தெரியாது. ஒவ்வொரு போட்டியாகப் பார்த்துக்கொள்ளலாம் என்றே அவர் கூறினார்.
ஆனால் இந்த உலக கிண்ணத்திலா் லியோவின் மிகச்சிறந்த ஆட்டத்தை நாம் கண்டுள்ளோம். அவர் தொடர்ந்து கால்பந்தாட்டத்தை அனுபவித்து விளையாட அனுமதிக்க வேண்டும், அதற்குப் பிறகு அவரே சரியான முடிவை எடுப்பார்” என்று கிளாடியோ குறிப்பிட்டார்.
ஜூன் 24 அன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடிய மெஸ்ஸி, சர்வதேசக் கால்பந்தாட்டத்தில் இருந்தோ அல்லது ‘இன்டர் மியாமி’ (Inter Miami) கிளப் அணியில் இருந்தோ எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து எந்தவொரு தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
2022 கத்தார் உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு மெஸ்ஸி மீண்டும் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் இருந்தது. இருப்பினும், இம்முறை மிகச்சிறப்பாக விளையாடிய மெஸ்ஸி 8 கோல்களையும் 4 ‘அசிஸ்ட்’களையும் (Assists) பதிவு செய்தார்.
கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் அர்ஜென்ரீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கூடுதல் நேரத்தில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது.
இந்த உலக கிண்ணத்தில் மிரோஸ்லாவ் குளோசேவின் (Miroslav Klose) 16 கோல் உலக சாதனைப் பதிவை முறியடித்த முதல் வீரரானார் மெஸ்ஸி; இருப்பினும் பிரான்ஸின் நட்சத்திர வீரர் கெய்லியன் எம்பாப்பே தொடரின் முடிவில் 22 கோல்களைப் பதிவு செய்து மெஸ்ஸியை விட ஒரு கோல் முன்னிலை பெற்று சாதனையைத் தன்வசப்படுத்தினார்.
அர்ஜென்ரீனா அணி தனது அடுத்த சர்வதேசப் போட்டிகளைச் செப்ரெம்பர் 21 முதல் 29 வரை விளையாடவுள்ளது. இதற்கான எதிரணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அர்ஜென்ரீனாவில் நடைபெறவுள்ள அடுத்த சொந்த மண் போட்டியே மெஸ்ஸியின் கடைசிப் போட்டியாக இருக்கலாம் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன.
