“இந்தியாவில் பலம்மிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடியது போல, எதிர்காலத்தில் இலங்கையிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நடக்கக்கூடும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
“அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரப் போக்கிற்கு எதிராகவும், நீதித்துறைச் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவுமே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. பொதுப் பிரச்சினைகளின் போது எங்களது இந்த இணைந்த பயணம் தொடருமே தவிர, தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடப் போவதில்லை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிடுகிறது. மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்குச் சரிந்து வருவதன் காரணமாகவே அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்கிறது. இந்தப் பிரச்சினையை நாங்கள் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வோம்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதைக் கண்டு அரசாங்கத்திற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசவும், ரணில் விக்ரமசிங்கவும் இணைந்தே தேர்தல்களை வழிநடத்துவார்கள். நாங்கள் அந்த முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டோம்.
இந்தியாவை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் சென்ற பலம்மிக்க தலைவரான பிரதமர் மோடிக்கு எதிராகவே அங்குள்ள இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். இலங்கையிலும் எதிர்காலத்தில் அத்தகைய சூழ்நிலை உருவாகக்கூடும்.
அத்துடன், 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பில் சஜித் பிரேமதாசவே வேட்பாளராகக் களமிறங்குவார். அவர் நிச்சயம் வெற்றிபெறுவார்” என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
