சவூதி அரேபியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்தியருக்கு திங்களன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்குள் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட இந்தியர் ஒருவருக்கு, உள்துறை அமைச்சகம் திங்களன்று மரண தண்டனையை நிறைவேற்றியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாணத்தின் தம்மாம் நகரில் லவ்லி ராணா என்ற இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்குள், மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளைக் கடத்திய குற்றச்சாட்டின்கீழ், இந்தியாவைச் சேர்ந்த லவ்லி ராணா என்பவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ராணா மீதான குற்றத்தை உறுதிசெய்து தீர்ப்பளித்தது, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்து, பிறகு தீர்ப்பு இறுதியானது. இஸ்லாமிய சட்டப்படி தண்டனையை நிறைவேற்றுவதற்கான அரச ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
சௌதி அரேபியாவில், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
