மலையகப் பகுதிகளில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாகக் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா, ஹட்டன், கினிகத்ஹேனை – பொல்பிட்டிய பகுதியில் நேற்று வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த அனர்த்தத்தில் காணாமல்போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது, முதலில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஆண் ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழைவீழ்ச்சியா ல் ஏற்பட்ட இந்த மண்சரிவுச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 581 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி – சோலங்கந்தை பகுதியில் நேற்று மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வர்த்தக நிலையமொன்று சேதமடைந்துள்ளதுடன், 65 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த மேற்படி நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தொடரும் சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்த தகவல்கள், நிலவும் வானிலை நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் இன்று மதியம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
