சுதந்திர தினத்யொட்டி, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் இன்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
தமிழகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று த.வெ.க. கூட்டணி ஆட்சி அமைந்து 3 மாதங்களாகும் நிலையில், நாட்டின் 80ஆவது சுதந்திர தினம் இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில் நிகழும் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து முதல்வர் விஜய் புறப்பட்டார்.
மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்ததும், காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்புடன் கோட்டையை நோக்கி முதல்வர் விஜய் வந்தார்.
அதன்பிறகு, கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் தொடர்ந்து திறந்த வாகனத்தில் (ஜீப்) சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து, சரியாக காலை 8.45 மணிக்கு கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து சுதந்திர நாள் உரையாற்றவிருக்கும் முதல்வர், தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது, சமூகநல சேவைக்கான விருது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளை வழங்குகிறார்.
