போர்க்காலத்தில் இராணுவம் பொதுமக்களின் கப்பல்களைக் கைப்பற்ற அனுமதிக்கும் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துமாறு சீனாவின் உயர்மட்டப் பொருளாதாரத் திட்டமிடல் ஆய்வாளர் ஒருவர் வலியுறுத்தி வருகிறார்.
1982 போக்லாந்து போரின்போது பிரிட்டன் தனது வர்த்தகக் கப்பல் படையை எவ்வாறு பயன்படுத்தியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் கீழ் உள்ள ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் லி ஜின் Li Jin இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
கடந்த மாதம் ‘சீனாவில் பாதுகாப்புத் தொழில் மாற்றம்’ (Defence Industry Conversion in China) என்ற இதழில் வெளியான கட்டுரையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் தொடங்கிய சில நாட்களிலேயே, பிரிட்டிஷ் அரசாங்கம் ஏராளமான பொதுமக்களின் கப்பல்களைப் பணியில் ஈடுபடுத்தியது. அவற்றை விமானங்கள், எரிபொருள் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு செல்லவும், மருத்துவ மற்றும் ஆதரவுப் பணிகளைக் கையாளவும் பயன்படுத்தியது.
இந்த நிகழ்வு, வெற்றிக்கான நான்கு முக்கியக் கூறுகளை நிரூபித்ததாக வாதிட்டுள்ள லி, சீனா தனது பிரம்மாண்டமான குடிமைப் பயன்பாட்டுக் கப்பல் தொகுப்பை முழுமையாக ஆய்வு செய்து, அதன் வேகம், சரக்குக் கொள்ளளவு, உரிமைப் பதிவுகள் மற்றும் பணியாளர்களின் தகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான தரவுத்தளத்தை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பகுதி-நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற வெளிப்படையான இராணுவத் திறன் கொண்ட கப்பல்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
