யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பிற்குள்ளான நூற்றுக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குகின்றனர் தெரிவிக்கப்படுகின்றது.

ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை நிகழ்வின்போதும் அதிக சக்தி வாய்ந்த மின்குமிழ்கள், லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார் 120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் தாமதமின்றி பரிசோதனை மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான விசேட வசதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 மேலதிக படுக்கைகளுடன் குறுகியகால தங்குமிடப் பிரிவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

தேவையான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதுடன், நோயாளிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து இன்று மாலை அல்லது இரவு வீடு திரும்பக்கூடிய நிலையில் இருப்பார்கள் என கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இது தொடர்பாக தேவையற்ற அச்சமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. கண் வலி, எரிச்சல், அதிக கண்ணீர் வடிதல், பார்வையில் மாற்றம் அல்லது கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்கள் தாமதமின்றி வைத்தியசாலைக்கு வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஆலய திருவிழாவின்போது மின் இணைப்புக்களை வழங்கியவர்கள் இளவாலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles