ஐபோன் தவணை செலுத்த முடியாததால் 18 வயது இளைஞர் உயிர்மாய்ப்பு: காப்பாற்ற முயன்ற பெற்றோரும் மரணம்!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கவ்டியா மலைப் பகுதியில் உயிர்மாய்க்க முயன்ற மகனை காப்பாற்ற முயன்ற பெற்றோர் உட்பட மூவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த 18 வயதான குணால் சந்கூடே என்ற வாலிபர், அண்மையில் தவணை முறையில் புதிய ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், அதற்கான மாதத் தவணையைக் கட்டுவதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாடகை கார் ஓட்டுநராகப் பணிபுரியும் தனது தந்தை முரளிதரிடம் தவணைப் பணத்தைக் கேட்டு குணால் தகராறு செய்துள்ளார்.

குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாகப் பணம் தர இயலாததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த குணால், வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அருகில் உள்ள கவ்டியா மலை உச்சிக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

தகவலறிந்த அவரது தாய் சங்கீதா, தந்தை முரளிதரன் உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர், கிராம மக்கள், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வாலிபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், பஞ்சாயத்துத் தலைவர் ஐபோன் வாங்கித் தருவதாகக் கூறியும் குணால் அதைக் கேட்கவில்லை.

மலையின் அடிவாரத்தில் இருந்த தந்தை முரளிதரன், பின்னர் மேலே ஏறி மகனிடம் பேச முயன்றுள்ளார். அப்போது திடீரென குணால் மலையிலிருந்து குதிக்க முயன்றபோது, அவரது தந்தை ஓடிச் சென்று மகனின் கையைப் பிடித்துக் காப்பாற்ற முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி இருவரும் மலையிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கண் முன்னே கணவனும் மகனும் மலையிலிருந்து விழுந்து உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதாவும் அதே மலையிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். சில நிமிடங்களிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles