கிழக்கு ஜெருசலேமிலுள்ள பிரித்தானிய தூதரகத்தை மூடுமாறு இஸ்ரேல் உத்தரவு

மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது தடைகளை விதிக்க லண்டன் திட்டமிட்டுள்ளதை அடுத்து, கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானிய துணைத் தூதரகத்தை இன்று வியாழக்கிழமைக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, தூதரகத்திலிருந்த பெயர்ப்பலகைகள் மற்றும் அடையாளப் பலகைகளை இரவோடு இரவாக ஊழியர்கள் அகற்றியுள்ளனர். இது இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

துணைத் தூதரக ஊழியர்கள் “பிரித்தானிய துணைத் தூதரகம்” (British Consulate General) என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகையையும், அதன் தூதரகப் பிரிவிற்கான மற்றொரு அடையாளப் பலகையையும் அகற்றுவதை ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் நேரில் கண்டுள்ளனர்.

இருப்பினும், கட்டிடத்தின் மீது பிரித்தானியக் கொடி இன்னமும் பறந்துகொண்டிருக்கிறது. இது குறித்து தூதரகம் உடனடியாக எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களைக் இலக்கு வைத்து, அங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கு வர்த்தகத் தடை விதிப்பது உட்பட பல தடைகளை பிரித்தானியா அறிவித்தது.

இதனையடுத்து, 30 நாட்களுக்குள் தூதரகத்தை மூடிவிட்டு, அந்நகரிலிருந்து தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்றுமாறு இஸ்ரேல் கடந்த மாதம் பிரித்தானியாவிற்கு உத்தரவிட்டது.

இக்குடியேற்றங்களை சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை என ஐக்கிய நாடுகள் சபையும் பெரும்பாலான நாடுகளும் கருதுகின்றன. ஆனால் இஸ்ரேல் இதனை மறுக்கிறது.

கடந்த வாரம் பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை இஸ்ரேலுக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியது உட்பட, தூதரகத்தைத் திறந்து வைக்க பிரித்தானியா முயற்சித்த போதிலும், தூதரகம் மூடப்படும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

1948 இல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்படுவதற்கு முன்னரே, அதாவது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அந்நகரில் பிரித்தானியாவின் தூதரக பயன்பாடு இருந்துவருகிறது. இந்த மூடல் உத்தரவு, இஸ்ரேல் அரசாங்கத்துடனான இராஜதந்திர உறவுகளைக் கையாளும் டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தைப் பாதிக்காது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles