ரஷ்யா மற்றும் ஜேர்மனி இடையே இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜேர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் Bonn நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும், பெர்லினில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தையும் மூட பெர்லின் நிர்வாகம் எடுத்த முடிவுக்குப் பதிலடியாகவே, ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் உள்ள தூதரகத்தை மூடும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தில் ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ஜேர்மனி குற்றம் சாட்டியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. எனினும், இக்குற்றச்சாட்டை ரஷ்யா “முற்றிலும் ஆதாரமற்ற புனைவு” எனக் கூறி நிராகரித்துள்ளது.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜேர்மன் துணைத் தூதரகம் செப்டம்பர் 18 ஆம் திகதி தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவில் உள்ள ஜேர்மனியின் ‘கோதே-இன்ஸ்டிடியூட்’ (Goethe-Institut) பண்பாட்டு மையங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும், அதன் ஊழியர்கள் செப்ரெம்பர் 13ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அது உறுதிப்படுத்தியுள்ளது.
“இருதரப்பு உறவுகளில் புதிய கட்ட பதற்றத்தைத் தூண்டியது மீண்டும் ஜேர்மன் அதிகாரிகளே ஆவர். இதன் விளைவுகளுக்கு ஜேர்மன் அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்,” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில் லைப்சிக் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக உளவுத்துறை குற்றம் சாட்டியதை அடுத்து, ஜேர்மன் தலைவர்களும் ஐரோப்பிய நட்பு நாடுகளும் கடும் கோபத்தை வெளிப்படுத்தின.
உக்ரைனின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக ஜேர்மனி திகழும் வேளையில், தங்கள் மண்ணில் நடத்தப்படும் “கலப்பினத் தாக்குதல்கள்” (hybrid attacks) குறித்து ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட டிரோன் பயன்படுத்தப்பட்ட லைப்சிக் விமான நிலைய சம்பவம், “அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தின்” அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
