சிங்கப்பூரில் King Albert Park பூங்காவில் உள்ள சொகுசு பங்களாவில், போக்கர் விளையாடிக் கொண்டிருந்த 11 பேரைக் கட்டிப் போட்டு, 4.9 மில்லியன் சிங்கப்பூர் டொலர் மதிப்பிலான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் ஆறு மலேசியர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு இடம்பெற்றது.
பாராங் கத்திகள் மற்றும் பேஸ்போல் மட்டைகளுடன் சென்ற கொள்ளையர்கள், பெரும்பகுதி கிரிப்டோகரன்சியாக இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, இரண்டு கார்களில் சிங்கப்பூரை விட்டு தப்பிச் சென்றனர் எனக் கூறப்படுகிறது.
நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆறு பேரும் ஆயுதமேந்திய கும்பல் கொள்ளை மற்றும் கொள்ளைப் பணத்தை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு மாற்றியதன் மூலம் பணமோசடி செய்த குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட 35 வயது வோங் சி சான், 30 வயது கோ பூன் டோங் இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் 11 மாதச் சிறைத்தண்டனை, 24 பிரம்படிகள் மற்றும் $4,000 அபராதம் விதிக்கப்பட்டன.
இதனிடையே, கொள்ளைக்கு உதவிய 49 வயதுடைய மற்றொருவருக்கு 10 ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
