“நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல் போய்விடும். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள் பொறுப்பெடுப்பீர்களா எனப் பலரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், என்னால் இனி நாட்டைப் பொறுப்பேற்க முடியாது; ஏனெனில் நான் தற்போது நாடாளுமன்றத்தில் இல்லை.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசியல் செய்யும்போது அதிகளவான பொறுமை இருக்க வேண்டும்; அப்போதுதான் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியுமாகும். ஆட்சி அதிகாரம் என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை.
அதிகாரம் கிடைக்கும்போது அதனை நாட்டுக்காக முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேநேரம், எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கட்சியில் இருப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். அத்துடன் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.
நாட்டுக்குள் கலவரங்கள் ஏற்பட்டு, நாடு முற்றாக வீழ்ச்சியடையும்போது ஆட்சியைப் பொறுப்பேற்க யாருமே முன்வராத இக்கட்டான நிலையில்தான் நான் முன்வந்தேன். யாரும் முன்வராவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் ஒன்று இருக்கப்போவதில்லை என்பதாலேயே நாட்டைப் பொறுப்பேற்றேன்.
இவ்வாறான இக்கட்டான நிலைமைகளில் அச்சப்பட்டுக்கொண்டு இருக்க முடியாது. எவ்வாறாவது நாட்டை நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணத்துடனேயே பொறுப்பை ஏற்றேன்.
ஜே.ஆர். ஜயவர்த்தன நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதுடன், நாட்டை முன்னேற்றுவதற்காக அனைவருக்கும் கல்வியைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தார்.
அன்று ஜே.ஆர். பாதுகாத்து வந்த ஜனநாயகத்தை யாராவது இல்லாமலாக்க முற்படுவார்களாகின், அதற்கு எதிராக நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அன்று ஏகாதிபத்தியவாதத்துக்கு எதிராக ஜே.ஆர். நாடு பூராகவும் மக்களை ஒன்றிணைத்துச் சத்தியாக்கிரகப் போராட்டங்களை மேற்கொண்டதைப் போன்று, தற்போதும் அவ்வாறானதொரு நிலை ஏற்படுமாகின் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – என்றார்.
