அயோத்தியில் தீபாவளிக்கு 27 லட்சம் தீபங்கள் ஏற்ற ஏற்பாடு

அயோத்தியில் கடந்த தீபாவளியை விட ஒரு லட்சம் கூடுதலாக 27 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளன. இதன் மூலம், தனது சாதனையை உத்தரப் பிரதேச அரசு தானே முறியடிக்க உள்ளது.

ராமர் கோயில் நகரமான அயோத்தியில் பத்தாவது ஆண்டாக தீப உற்சவம் நடைபெற உள்ளது. இங்குள்ள சரயு நதிக்கரையில் கடந்த 9 வருடங்களாக உ.பி அரசு சார்பில் தீப விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விளக்குகளின் அதிக எண்ணிக்கையால் உ.பி அரசு உலக சாதனையாக கின்னஸில் இடம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போல் இந்த வருடமும் தனது சாதனையை தானே முறியடிக்க 27 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.

கடந்த வருடம் தீபாவளியில் 26 லட்சம் தீப விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. பாஜக முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் கனவுத் திட்டமாக இது கருதப்படுகிறது.

இந்த வருடம் நவம்பர் 5 முதல் 8 வரையிலான திகதிகளில் இந்த தீப உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உ.பி அரசு சார்பில் அதன் கல்வி நிலையமான அயோத்தியின் அவத் பல்கலைக்கழகம் செய்கிறது.

இது குறித்து அவத் பல்கலைக்கழக துணைவேந்தரான பிரிஜேந்தர் சிங் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறுகையில், ‘இந்நிகழ்ச்சிக்காக சுமார் 35,000 தன்னார்வலர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் போல் இந்த வருடமும் சரயு நதிக்கரையில் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன. அதிலும், இந்த வருடம் ஒரு லட்சம் விளக்குகள் கூடுதலாக ஏற்றப்பட உள்ளன. இவை நதிக்கரையின் அக்கம், பக்கப் பகுதிகளில் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலையுடன் எங்கள் உறுப்புக் கல்லூரிகளின் மாணவர்களும் இணைந்து இப்பணியில் அதிகமாகப் பங்கு பெறுகின்றனர்.’ எனத் தெரிவித்தார்.

இதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 35,000 தன்னார்வலர்களையும் ஒரு டேட்டா பேஸ் வாயிலாக இணைக்க முடிவாகி உள்ளது. இதற்கான நிர்வாகப் பணியில் அயோத்தியின் மாவட்ட ஆட்சியர் மற்றும் பிராந்திய ஆணையர் அலுவலக நிர்வாகமும் உதவி புரிகிறது.

தீப உற்சவ நாட்களில் அப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க போதுமான அளவில் குப்பை கூடைகளும், பொதுமக்களுக்கானக் குடிதண்ணீரும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

தன்னார்வலர்களாக சுமார் 5,000 பெண்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆனால், இதில் பள்ளிச் சிறுவர்கள் பங்குபெற அனுமதிக்கப்படவில்லை.

இந்நிகழ்ச்சிக்காக 14 தற்காலிக மருத்துவமனை முகாம்களும், ஆம்புலன்ஸ் சேவைகளும் 24 மணி நேரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மருத்துவப் பணியில் 45 மருத்துவர்களும் அமர்த்தப்பட உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles