கனடாவின் ரொறன்ரோ நகரிலுள்ள அதிவேக 401 நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற லாரி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கென்னடி வீதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று, கிழக்கே 401 நெடுஞ்சாலையை இணைக்கும் பாதையில் காலை 9:20 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
அங்கு சிமென்ட் கலவை லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து ஒன்ராறியோ மாகாண பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த லாரியின் ஓட்டுநரான, ஸ்கார்பரோவைச் சேர்ந்த 57 வயது நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அந்த பாதை, தற்போது மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள் அல்லது விபத்து நடந்த நேரத்தில் பதிவுசெய்யப்பட்ட ‘டேஷ்கேம்’ காணொளிகள் ஏதேனும் வைத்திருப்போர் உடனடியாக பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு ஒன்டாரியோ மாகாண பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
