நல்லூரில் அகற்றப்பட்ட திலீபனின் சிலை நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது

நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் சிலை, பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை பாரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டுப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்த யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பொலிஸார், சிலையை நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான அனுமதியைக் கோரியிருந்தாலும், வழக்கில் சந்தேகநபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமையைக் காரணம் காட்டி நீதிமன்றம் ஆரம்பத்தில் அதனை ஏற்க மறுத்து, வழக்கை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், யாழ். பொலிஸ் நிலையத்தில் கடந்த 8 நாள்களாக வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை, வெள்ளைத் துணியால் மூடப்பட்ட நிலையில் பொலிஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு இன்று நீதிமன்றக் கட்டுக்காவலுக்காக ஒப்படைக்கப்பட்டது.

சிலை வைப்புத் தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொலிஸார் தமது விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே யாழ். மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், இன்று நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் மற்றும் தியாக தீபத்தின் ஆவணக் காப்பகச் செயற்பாட்டாளர் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles