வைத்தியசாலையில் இருந்து சுரேஷ் சலே மீண்டும் சி.ஐ.டிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

அரசுப் புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெற்றுவந்த சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் இன்று (6) பிற்பகல் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்துச் செல்லப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பு காவலில் சிகிச்சை பெற்றுவந்த சுரேஷ் சலேவுக்குச் சிகிச்சையளித்த மருத்துவக் குழாமின் 10 மருத்துவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் அழைப்பாணை விடுத்திருந்தார்.

அந்த அறிவித்தலுக்கு அமைய, 100 நாட்களுக்கும் மேலாகச் சிகிச்சை பெற்றுவந்த சுரேஷ் சாலே வைத்தியசாலையிலிருந்து வெளியேறக்கூடிய உடற்தகுதியில் உள்ளார் என 10 மருத்துவர்கள் அடங்கிய அந்தக் குழாம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த அறிவிப்பையடுத்து, சுரேஷ் சலே இன்று பிற்பகலே மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்படுவார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர், அவரை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், தமக்கு மனிதநேயமற்ற சித்திரவதைகள் இடம்பெறுவதாகக் கூறி சுரேஷ் சலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அவரது சுகாதார நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இதனிடையே, சுரேஷ் சலேவுக்கு எதிரான 90 நாள் தடுப்புக் காவல் கட்டளை முடிவடைந்ததும் அதனை மீண்டும் நீடிக்காமல், அவரை விளக்கமறியலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி அவரது மனைவி மனோரி சலே மற்றும் தாயார் ஆகியோர் ஜனாதிபதிக்குக் கடிதங்களை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles