சவூதி அரேபியாவில் மதநிந்தனை குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை சவூதிக்கான இலங்கைத் தூதர் ஓ.எல். அமீர் அஜ்வாட், நேற்று பார்வையிட்டுளளார்.
தம்மாம் மத்திய சிறைச்சாலைக்கு சென்ற அவர் அனோஜனை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின்போது தூதர், அனோஜனுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவரது தேவைகளுக்கும், அவர் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், அனோஜனுக்குத் தேவையான அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் வழங்கத் தூதரகம் உறுதிபூண்டுள்ளதாகவும் தூதர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் நேரடித் தொடர்பை எளிதாக்கும் வகையில், தூதரின் தனிப்பட்ட தொடர்பு விவரங்களும் அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை அனோஜன் சிவராசா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், சவூதி சிறை அதிகாரிகள் அவரது நலனில் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் தூதரகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், இந்தப் பயணத்தின்போது இலங்கைத் தூதர் தம்மாம் மத்திய சிறையின் பணிப்பாளர் மற்றும் சிறை மருத்துவருடனும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.
