யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இன்று (24) மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சொத்துக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும் புகை மண்டலமாக மாறியுள்ளது.
நீண்டகாலமாகச் செயலற்றுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உள்ள பழைய இரும்புகளை அகற்றும் பணி, தற்சமயம் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப்பணிகள் இன்று மாலையும் வழமை போல் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம், இரும்புகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்த விபரீத தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எரிவாயு கசிவால் எரியத் தொடங்கிய தீ, எதிர்பாராதவிதமாகத் தொழிற்சாலை வளாகத்தில் தங்கியிருந்த இராணுவத்தினரின் தங்குமிட பகுதிக்கும் மிக வேகமாகப் பரவியுள்ளது.
இதனால், அங்கு வைக்கப்பட்டிருந்த இராணுவப் பணியாளர்களின் உடைகள், மெத்தைகள் மற்றும் பாதுகாப்புப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன.
இதன் காரணமாகப் பெரும் தீச்சுவாலை ஏற்பட்டு, காங்கேசன்துறை வான்பரப்பு முழுவதும் கரும் புகை மண்டலமாகச் சூழ்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து உடனடியாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்புப் படையினர், இராணுவத்தினருடன் இணைந்து தீயை மேலும் பரவவிடாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
