கிளிநொச்சி பொலிஸ் நிலையப் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி உடன் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி இன்று மக்களால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் திகதி, கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்டபோது, அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில், பெருமாள் கணேசன் என்ற 64 வயதான ஓய்வுபெற்ற அதிபர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் இறப்புக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் எனவும், கிளிநொச்சி பகுதியில் பல்வேறு விபத்துக்கள் மது மற்றும் போதைப்பொருள் பாவனையினால் இடம்பெறுவதாகவும், இதற்கு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பு அதிகாரி உரிய பதிலை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தும், குறித்த போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி உடன் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியும் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கைக்கு, ஐந்து நாள்களுக்குள் உரிய பதிலை பெற்றுத்தர வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம், மக்கள் தமது ஆதங்கத்தை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட சிவில் அமைப்புக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, உரிய தீர்வை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்ததை தொடர்ந்து, போராட்டம் நிறைவுக்கு வந்தது.
