சிங்கப்பூரும் சுவீடனும் நிலையான எரிசக்தி, குவான்டம் துறை உள்ளிட்ட வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவுள்ளன.
அடுத்த தலைமுறைப் புவியிடங்காட்டித் தொழில்நுட்பங்களில் இரு நாடுகளையும் சேர்ந்த ஆய்வு, கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்படும் என்று சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு (ஏஐ), அடுத்த தலைமுறை கைப்பேசிக் கட்டமைப்புக்கான ‘6ஜி’ முதலியவை அவற்றுள் அடங்கும்.
அடுத்த தலைமுறைப் புவியிடங்காட்டித் தொழில்நுட்பங்கள், பாரம்பரிய கட்டமைப்புக்கு அப்பால் சென்று இருப்பிடத்தைக் கண்டறியவும் கண்காணிக்கவும் முனைகின்றன.
இரு நாடுகளும் புத்தாக்கத்திற்கு ஆதரவளிக்கவும் தங்களின் சமூகங்களையும் பொருளியல்களையும் வலுப்படுத்தவும் அதிகம் ஒத்துழைக்க உறுதியளித்தன.
ஸ்டாக்ஹோமில் உள்ள எரிக்சன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமையகத்தில் நம்பிக்கையான, புதுமையான தொழில்நுட்பங்கள் குறித்த உத்திபூர்வ ஒத்துழைப்புக்கான கூட்டறிக்கையில் இரு தரப்பும் கையெழுத்திட்டன.
அதிபர் தர்மன், சுவீடனுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
உலகம் அதிகம் பிளவுபட்டு நிச்சயமற்றதாக மாறிவரும் சூழலில், ஒருமித்த நம்பிக்கையைச் சிங்கப்பூரும் சுவீடனும் பகிர்ந்துகொள்வதாக அவர் தெரிவித்தார்.
“ஒரே மாதிரியான சிந்தனை கொண்ட நாடுகள் தங்களின் திறன்களை ஒன்றிணைத்துப் பொதுவான சவால்களை எதிர்கொள்ளவும் வாய்ப்புகளை ஒன்றாக வளர்த்தெடுக்கவும் நெருக்கமாகச் செயல்பட வேண்டும்” என்று தர்மன் குறிப்பிட்டார்.
