அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென இஸ்ரேலுக்குச் சென்றுள்ளார்.
இஸ்ரேலில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத் எந்தவொரு முன்னறிவிப்பின்றி நேற்று (19) அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பயணத்தில், அமைச்சர் ஹெக்ஸெத் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இருப்பினும், இந்தச் சந்திப்புக்கான காரணம் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசுகள் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
இந்தச் சந்திப்பு, இஸ்ரேலின் தெற்குப் பாலைவனப் பகுதியில் நடைபெற்றதாக இஸ்ரேல் ராணுவத்தின் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
காஸா மீதான இஸ்ரேலின் போருக்குப் பின்பு முதல்முறையாக நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார்.
இருப்பினும், நடைபெறவுள்ள தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையைப் பெறாது எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்தச் சூழலில், அமெரிக்க அமைச்சரின் இந்த திடீர் பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
