ஈரான் உடனான எல்லையைத் திகதி குறிப்பிடாமல் ஈராக் அரசு மூடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானுடனான அல்-ஷீப் எனும் நிலம் வாயிலான எல்லையை ஈராக் அதிகாரிகள் இன்று புதன்கிழமை காலை முதல் மூடியுள்ளனர் எனவும், அதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை, ஈராக்கின் சட்டத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில், இராக் பிரதமர் அலுவலகத்தின் முடிவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரான் மற்றும் ஈராக் ஆகிய இருநாடுகளும் அரசியல், பொருளாதாரம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் நெருங்கிய உறவுகளை கடைப்பிடித்து வருகின்றன. இருநாடுகளும் 8 அதிகாரபூர்வ எல்லை வாயில்களுடன் சுமார் 1,400 கி.மீ. நீளத்துக்கு எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன.
ஏற்கெனவே, ஈரான் அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, தொடர்ந்து பல்வேறு நாடுகளை அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தி வருகின்றது.
கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஈராக் பிரதமர் அலி அல்-சைதி நியூயார்க் சென்றிருந்தபோது இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க அரசு அவருக்கு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஈரான் உடனான எல்லையை மூடுவதற்கு அதன் அண்டை நாடுகளை அமெரிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
