ஜேர்மனிக்குக் கடத்தப்படவிருந்த 3,000 இற்கும் மேற்பட்ட ரறன்ருலா (tarantula) வகைச் சிலந்திகள் பெருவின் லிமா விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஜேர்மனியைச் சேர்ந்த இருவர் மற்றும் போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான சுங்கச் சோதனையின்போது, அவர்கள் கொண்டுவந்திருந்த சூட்கேஸூகளுக்குள் ஏதோ ஒன்று அசையும் தன்மையுடன் இருப்பதை அவதானித்த அதிகாரிகள் அதனை சோதனை செய்தபோது இந்த கடத்தல் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
ஐரோப்பாவில் ஒரு ரறன்ருலா சிலந்தி சுமார் 500 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக வனவிலங்கு கட்டுப்பாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் கோரா சுவாரெஸ் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், ஒரே ஒரு கடத்தல் முயற்சியின் மூலம் சுமார் 1.5 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வணிகம் நடந்திருக்கக்கூடும் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்தச் சிலந்திகள், முட்டைகள், குஞ்சுகள் மற்றும் வளர்ந்த சிலந்திகள் என வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் இருந்தன என்றும் அவர் விவரித்துள்ளார்.
